டிரம்ப் மீது வழக்குத் தொடர்ந்த ஆபாசப் பட நடிகைக்கு பின்னடைவு

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ஸ்ட்ராமி டேனியல்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் தாம் பாலுறவு கொண்டதை வெளியில் தெரிவிக்காமல் இருக்க மிரட்டப்பட்டதாக கூறிய ஆபாசப் பட நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ், டிரம்ப் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், டிரம்ப் தரப்பின் சட்டச் செலவுகளில் சுமார் 75 சதவிகிதமான 2,93,052.33 டாலரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
முன்பின் தெரியாத ஒருவரால் ஒருவேளை தாம் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று டிரம்ப் தம்மைப் பகடி செய்ததாக ஸ்ராட்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த உத்தரவு மேல்முறையீட்டில் நிலைக்காது என டேனியல்ஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபரின் உளவாளி அடையாள அட்டை

பட மூலாதாரம், BSTU
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 1980களில் சோவியத் ஒன்றியத்தின் உளவு அதிகாரியாக, கிழக்கு ஜெர்மனியில் பணியாற்றியபோது பயன்படுத்திய அடையாள அட்டை ஜெர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரின் ரகசியக் காவல் அமைப்பின் ஆவணக் காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோவியத் ரஷ்யாவின் கே.ஜி.பி மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஸ்டாசி ஆகிய உளவு அமைப்புகளுக்கு இடையே இருந்த ஒத்துழைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இது கிடைத்துள்ளது.

சீன தொழில் அதிபர் மகள் பிணையில் விடுதலை

பட மூலாதாரம், EPA
கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாவெய் தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ் அங்குள்ள நீதிமன்றம் ஒன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவெயை நிறுவியவரின் மகள் ஆவார்.
இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அவர் மீறியதாக டிசம்பர் 1 அன்று, அமெரிக்க அரசின் வேண்டுகோளின்படி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது கனடா மற்றும் அமெரிக்கா உடனான சீனாவின் உறவில் விரிசலை உண்டாக்கியது.

பிரான்ஸ் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பட மூலாதாரம், Getty Images
பிரான்சில் உள்ள ஸ்டார்ஸ்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பியோடிவிட்டார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












