யேமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு - தொண்டு நிறுவனம் எச்சரிக்கை

பட மூலாதாரம், MOHAMMED AWADH/ SAVE THE CHILDREN
யேமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக 'சேவ் த சில்ரன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
யேமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஏமனின் முக்கிய துறைமுக நகரமான ஹுடேடாவில் மோதல் நடந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த நகருக்கு உணவுப் பொருட்கள் வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
யேமனில் போர் ஏன்?
2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகரித்த மோதலால் ஏமன் பெரிதும் சீர்குலைந்துள்ளது. அக்காலகட்டத்தில் இந்த பகுதியை ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் கடும் மோதல் ஏற்பட்ட சூழலில், யேமன் அதிபர் அபடுருபூ மன்சோர் ஹாதி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேரிட்டது.

பட மூலாதாரம், Reuters
இரானின் பிரதிநிதியாக கருதப்பட்ட ஒரு குழுவின் திடீர் வளர்ச்சியால் எச்சரிக்கையான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் 7 அரபு நாடுகள் யேமன் அரசை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.
போரினால் ஏற்பட்ட பாதிப்புகள்
யேமனில் தொடர்ந்து நடந்துவரும் போரினால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பலமுறை தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதில் சில அரசுப் பணியாளர்கள் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஊதியம் எதுவுமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போர் தொடங்கிய காலத்தைவிட தற்போதைய காலகட்டத்தில் உணவு பொருட்களின் விலை 68 சதவீதம் கூடுதலாக உள்ளது.
யேமன் ரியால் நாணயத்தின் மதிப்பு இந்த காலகட்டத்தில் ஏறக்குறைய 180 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக 'சேவ் த சில்ட்ரன்' தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் யேமன் நாட்டு நாணயத்தின் மதிப்பு அதன் வரலாற்றில் மிக குறைந்த நிலையை எட்டியது. இது அந்நாட்டின் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
''தங்களுக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்று பல மில்லியன் குழந்தைகளுக்கு தெரியாத நிலை உள்ளது'' என்று சேவ் த சில்ட்ரன் அமைப்பின் தலைமை நிர்வாகியான ஹெல டார்னிங் ஸ்மிட் கூறினார்.
''வடக்கு யேமனில் நான் சென்ற ஒரு மருத்துவமனையில், குழந்தைகள் அழுவதற்குக்கூட வலுவில்லாமல் இருந்தனர். அவர்களது உடல் வலுவை பசி தின்றுவிட்டது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
யேமனில் தொடர்ந்து நடந்துவரும் மோதல்களில் ஏறக்குறைய 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 55 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













