ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு - புகைப்படத் தொகுப்பு
1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு.

பட மூலாதாரம், Getty Images
ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா.

பட மூலாதாரம், Getty Images
குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த அமெரிக்க போர்க்கப்பலான அகஸ்டாவிலிருந்து அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் அறிவித்தார். இதற்கு முன்பாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய குண்டைவிட, 2,000 மடங்கு பெரிய குண்டு இதுவென ட்ரூமன் கூறினார்.

பட மூலாதாரம், Library of Congress
ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு "லிட்டில் பாய்" எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியை அந்த அணுகுண்டு கொண்டிருந்தது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணுகுண்டு நாசம் செய்தது.

பட மூலாதாரம், PA
உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B - 29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது.

குண்டு விழுந்த இடத்திலிருந்து ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக ஆவியானார்கள்.

பட மூலாதாரம், Universal History Archive/UIG?getty Images
மாபெரும் புகை எழுந்ததையும் மிகப் பெரிய தீ சுவாலைகள் பரவியதையும் பார்த்ததாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் அழிந்துபோயின.

பட மூலாதாரம், AlINARI Via Getty Images
இந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.

பட மூலாதாரம், AFP
ஆனால், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

இந்த நபர் குண்டுவீச்சின் போது அணிந்திருந்த கிமோனோ ஆடையில் அழுத்தமான வண்ணங்கள் என்ன பாணியில் இருந்ததோ, அதே பாணியில் தீக்காயம் ஏற்பட்டது.

ஜெர்மனியும் அணுகுண்டைத் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த குண்டின் மூலம் அமெரிக்கா அந்தப் பந்தையத்தில் முந்தியதாகக் கருதப்பட்டது.

இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக, ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது. ஆனால், குண்டை வீசுவதற்கு முன்பாகவே ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்தது என்கிறார்கள் விமர்சகர்கள். இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டதும், 1945 ஆக்ஸட் 8ஆம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பானுக்கு வேறு வழியில்லாமல் போனது. அதே மாதம் 14ஆம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்.













