பிரிட்டனில் தம்பதியர் மீது மீண்டுமொரு நச்சுத் தாக்குதல்

வில்ட்ஷரில் சுயநினைவிழந்த நிலையில் கண்டபிடிக்கப்பட்ட ஓர் ஆணும், பெண்ணும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மீது நடத்தப்பட்ட அதே நச்சுப்பொருளான நோவிச்சோக்கை பயன்படுத்தி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்ட தம்பதியர்

பட மூலாதாரம், FACEBOOK

கடந்த சனிக்கிழமையன்று சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டனர்.

இதுபோன்ற அறிகுறிகளுடன் வேறு யாரையும் இதுவரை பார்த்ததில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

இந்த தம்பதியர் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதற்கு எவ்வித பின்னணியும் இல்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்கிரிபாலும், அவரது மகள் யுலியாவும் தாக்குதலுக்குள்ளான அதே பிரிவிடம் இருந்து, இந்த நரம்பு மண்டலத்தை தாக்குகின்ற நச்சுப்பொருளும் வந்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று பெருநகர காவல்துறை உதவி ஆணையாளர் நெயில் பாசு தெரிவித்திருக்கிறார்.

இதற்கான சாத்தியக்கூறு பற்றி தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நச்சு கலக்கப்பட்ட எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இந்த தம்பதியர் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளானதை முடிவு செய்ய அவர்களின் நடத்தை பற்றி விரிவான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை

பட மூலாதாரம், PA

என்ன பொருள் என்று தெரியாத பட்சத்தில் பொது மக்கள் எதையும் கையில் எடுத்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முறை நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நச்சுப்பொருளில் என்ன உள்ளடங்கியிருந்தன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வில்ட்ஷர் காவல்துறையோடு இணைந்து பயங்கரவாத தடுப்பு காவல்துறை வலையமைப்பும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புவதாக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி சால்லி டாவிஸ் கூறியுள்ளார்.

வழக்கமான முறையில் வெளியே போடுவதற்கு முன்னர், மக்கள் தங்களுடைய துணிகள், தனிப்பட்ட பொருட்கள், காலணிகள் மற்றும் பைகளை சுத்தப்படுத்திவிட வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :