குடியேறிகள் விவகாரம்: "அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம்" - டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
சட்டவிரோதமாக நுழைந்த குடியேறியவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களுக்கான நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்கினார். குடியேறியவர்களின் குடும்பங்களை பிரித்ததாக பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதற்கு இடையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், "உங்கள் அன்புக்குரியவர்கள் வீணாக இறந்திருக்கவில்லை" என்று டிரம்ப் கூறினார்.
2000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிப்பதற்கு வழிவகை செய்த, அமெரிக்காவின் குடியேறிகள் கொள்கையை மாற்றியமைத்த அதிபர் டிரம்பிற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து தரப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, தன் கொள்கையை டிரம்ப் திரும்பப் பெற்றார்.
இது தொடர்பான புதிய உத்தரவொன்றில் புதன்கிழமையன்று கையெழுத்திட்ட டிரம்ப், ''குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருதரப்பும் ஓரிடத்தில் வைக்கப்படுவர்'' என்று தெரிவித்திருந்தார்.
''பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை'' என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று கூறியிருந்தார்.
நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது என்ன?
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அறிமுகப்படுத்தி வெள்ளிக்கிழமையன்று பேசிய டிரம்ப், "இந்த அமெரிக்க குடிமகர்கள் தனது அன்புக்குரியவர்களிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இதைவிட மோசமாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், நாம் பலத்துடன் செயல்பட்டு, இதனை தீர்ப்போம் என்று சத்தியம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
நம் எல்லை மற்றும் நாட்டு மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று கூறிய அவர், குடியேறிகள் நெருக்கடிக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றார்.
ஆவணங்கள் இல்லாத குடியேறி ஒருவரால் 2010ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தன் மகன் குறித்து பேசிய அவரது தாய் லாரா வில்கெர்சன், "நம் குழந்தைகள் அவர்களது கடைசி நிமிடங்களை நம்முடன் செலவிடவில்லை. ஐந்தோ அல்லது பத்து நாட்கள் கழித்து அவர்கள் நம்மிடம் திரும்பி வர நாம் கொடுத்து வைக்கவில்லை. அவர்கள் நம்மிடம் இருந்து முழுமையாக பிரிக்கப்பட்டு விட்டனர்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












