அமெரிக்கா: முன்னாள் நீதிபதியான டிரம்ப் கட்சி செனட் வேட்பாளர் மீது பாலியல் புகார்
அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நீதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூர் தாம் 14 வயதாக இருக்கும்போது தம்மை மயக்கி பாலியல் ரீதியாக தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
என்.பி.சி. செய்தியிடம் பேசிய லெய் கார்ஃப்மேன் என்ற அந்தப் பெண் 1979ல் தாம் 14 வயதாக இருக்கும்போது 32 வயதான வழக்குரைஞராக இருந்த ராய் மூர் தம்மை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
மூர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும், கருத்துக்கணிப்புகளில் அவர் பின் தங்கியிருக்கிறார். அலபாமா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மூருக்கு தற்போது வயது 70. கிறிஸ்துவப் பழமைவாதியான இவருக்கு எதிராக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே அணி திரள்கிறார்கள். இவர் தேர்ந்தெடுக்கப்படுவதை அவரது சொந்தக் கட்சியினரே விரும்பவில்லை.
தமது தாய் தந்தை விவாகரத்து வழக்கில் தாய் யாரோடு இருப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கான வழக்கு ஒன்று நடந்துகொண்டிருந்தபோது 1979ம் ஆண்டு தாம் தம் தாயோடு எடோவா கவுன்டி நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தபோது மூர் தம்மை அணுகியதாக கார்ஃப்மேன் முதலில் வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மாவட்ட உதவி அரசு வழக்குரைஞர் தம் மகளோடு அமர வந்ததையும், அதனால் வழக்கு வேலைகளைத் தம்மால் கவனிக்க முடிந்ததையும் எண்ணி அவரது தாய் மகிழ்ச்சி அடைந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.
இதையடுத்த சில நாளில் தமதுவீட்டில் இருந்து தம்மை வீட்டுக்கு மூர் தன் வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் அங்கே அவர் தம்மை மயக்கி தமது உள்ளாடையை அவிழ்த்ததாகவும், தம்மைத் தொடும்படி வலியுறுத்தியதாகவும் கூறிய கார்ஃப்மேன், ஒரு கட்டத்தில் திமிறிக்கொண்டு எழுந்து தமக்குப் பிடிக்கவில்லை என்று கூறிய பின் அவர் தம்மை தம் வீட்டில் கொண்டுவந்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Reuters
ஒப்புதலோடு உறவு கொள்வதற்கு அலபாமாவில் பெண்ணுக்கு 16 வயது இருக்கவேண்டும். ஆனால், அப்போது தமக்கு 14 வயதுதான் என்கிறார் கார்ஃப்மேன். வேறு பல பெண்களும் தாங்கள் பதின்ம வயதில் இருந்தபோது பாலியல்ரீதியாக மூர் தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் உணவகப் பறிமாறும் பெண் ஒருவர் மூர் தம்மை வன்புணர்வு செய்ய முயன்றதாகக் கூறியுள்ளார்.
அலபாமா செனட்டர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 12 அன்று நடக்கிறது. செனட்டில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு இரண்டு பேர் பெரும்பான்மை மட்டுமே உள்ள நிலையில் அலபாமாவில் தோற்றால் அக்கட்சி பெரிய அரசியல் பாதிப்பை எதிர்கொள்ளும். இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தலில் மூருக்கான தமது ஆதரவை வலுவாக வெளிப்படுத்தியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












