புற்றுநோய் 'கடவுள் வழங்கும் நீதி' என்று பேசிய அசாம் அமைச்சருக்கு எதிர்ப்பு

ஒருவரின் கடந்தகால பாவங்களால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் அது 'தெய்வ நீதி' என்று அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர், பேசியுள்ளதற்கு மக்கள் மிகவும் கோபமாக சமூக ஊடகங்களில் பதிலளித்து வருகின்றனர்.

இந்தியாவின் அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சராக ஹிமன்ட பிஸ்வா சர்மா பணியாற்றி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமன்த பிஸ்வா சர்மா.

பெற்றோரின் பாவங்களாலும் ஒருவருக்கு புற்றுநோய் போன்ற நோய்களை வரலாம் என்று ஹிமன்தா பிஸ்வா சர்மா கூறியிருக்கிறார்.

இந்த அமைச்சரின் கூற்றால் கவலையடைந்திருப்பதாக புற்று நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் கூறியுள்ளனர்.

அமைச்சரின் இந்த அறிக்கை துரதிஷ்டவசமானது என்று கூறியிருக்கும் எதிர்க்கட்சிகள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தில் பரவி வரும் புற்றுநோயை தடுப்பதில் தோல்வியடைந்துள்ளதை மூடி மறைக்கவே சர்மா இவ்வாறு பேசியுள்ளதாக, அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியான 'அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி' கூறியுள்ளது.

புதன்கிழமையன்று குவாஹாட்டியில் பொது நிகழ்வில் பேசியபோது, பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

"நாம் பாவங்கள் செய்யும்போது, கடவுள் நம்மை துன்புறச் செய்கிறார். சிலவேளைகளில் இளைஞர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதை அல்லது இளைஞர்கள் விபத்தில் சிக்குவதை அறிய வருகிறோம். அவற்றின் பின்னணிகளை நீங்கள் பார்த்தால், தெய்வ நீதியை நீங்கள் அறிய வரலாம். வேறு ஒன்றுமில்லை. அந்த தெய்வநீதியை அனுபவித்து ஆகவேண்டும்," என்று அமைச்சர் பிஸ்வா சர்மா பேசியதை மேற்கோள்காட்டி 'த டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

அவருடைய இந்த கூற்றுக்கு டுவிட்டரில் பலர் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினராக இருக்கும் பிஸ்வா சர்மா, பின்னர் தமது கருத்தில் உறுதியாக மீண்டும் விளக்களித்து டிவிட்டரில் இட்டப் பதிவு மக்களை மேலதிகமாக கோபமடைய செய்துள்ளது.

"என்னுடைய பேச்சு புற்றுநோய் பற்றியா இருந்தது? யார் சொன்னது? புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களிடம் நேர்மையாக பணிபுரியவும், ஏழைகளுக்காக உழைக்கவும் கேட்டுக்கொண்டேன். இந்தப் பின்னணியில், நாம் நேர்மையாக பணிபுரியாவிட்டால். அடுத்த ஜென்மத்தில் கர்மா பற்றாகுறையை சந்திக்கலாம். அது துன்பங்களுக்கு இட்டுசெல்லலாம். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

விழிப்புணர்வு இல்லாமலும், சோதனை வசதிகளின் குறைபாட்டாலும், 12.5 சதவீத நோயாளிகளே புற்றுநோயின் தொடக்க நிலைகளில் சிகிச்சைக்காக வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

2020ஆம் ஆண்டு இந்தியாவில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரும் அல்லது புற்றுநோய் பரவுவதும் 25 சதவீதம் அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :