வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Reuters
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரை மேலும் தீவிரமாக்கும் வகையில், வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
`அமெரிக்க ராணுவப் படைகள் முழு அளவில், தகுந்த இடங்களில் தயாராக உள்ளன. வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் புதிய வழியை தேர்ந்தெடுப்பார் என நம்புகிறேன்` என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூளுவதற்கு டிரம்ப் முயல்வதாக வட கொரியா குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலடியாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒரு பகுதியான குவாமிற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பசுபிக் தீவுகளுக்கான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணைத் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் அடங்கிய அறிவுப்புகளை அங்கிருக்கும் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தது.
அந்த அறிவுரைகளில்,` எந்த ஒளிப்பிழம்பையும், தீப்பந்துகளையும் பார்க்காதீர்கள். அது உங்கள் கண்களை குருடாக்கக் கூடும்` என தெரிவிக்கப்பட்டிருந்தது.
`தரையில் படுத்து உங்கள் தலையை மறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் வெடிகுண்டுகள் இருந்தால், அவை வெடித்துச் சிதற குறைந்தது 30 நொடிகள் அல்லது அதற்கும் மேலும் நேரம் எடுத்துக் கொள்ளும்.` என அந்த அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஷிங்டனும், பியாங்காங்கும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்துக் கொள்வது ` மிகமிக கவலையளிப்பதாக` மாஸ்கோ தெரிவித்துள்ளது.
ராணுவ மோதல் மூள்வதற்கான ஆபத்து மிக அதிக அளவில் இருப்பதாக கணக்கிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ரஷ்யா-சீனா இணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்துள்ளார்.
வடகொரியாவுக்கு எதிரான தனது இரண்டாவது டிவீட்டில் பியாங்யாங் மீது `நெருப்பும்,கோபமும் ` மழையாக பொழியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வடகொரியாவுடனான பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் கூடிய அடுத்த சில மணி நேரங்களில் டிரம்பின் இந்த டிவீட் பதிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை கலிஃபோர்னியாவில் பேசிய பெண்டகனின் தலைவர், போருக்கு தயாராக இருப்பது எனது பணி என தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்க உள்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே ஆகியோரின் முயற்சிகள் ` ராஜதந்திரமான முடிவுகளை பெற்றுத்தரும்` என அவர் கூறியுள்ளார்.
`போரில் எவ்வளவு அழிவுகள் ஏற்படும் என்பது போதுமான அளவு அனைவரும் அறிந்திருக்கிறோம். இது பேரழிவைத்தான் தரும் என்பதைத் தாண்டி அதற்கு புதிய காரணத்தை கூறத் தேவையில்லை.` என மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் போருக்கான தயார் நிலை குறித்து கேட்ட போது, ` நாடு தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து எதிரிகளுக்கு முன்கூட்டியே கூற முடியாது` என தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று, வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான கே.சி.என்.ஏ, கொரிய நாட்டின் மீது அணு ஆயுத பேரழிவை திணிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. தனது அணு ஆயுதங்களை கொரிய தீபகற்பத்தில் சோதித்து பார்க்க, மிகப்பெரிய முயற்சிகளை அமெரிக்கா எடுத்து வருவதாகவும் அந்த செய்தி முகமை தெரிவித்திருந்தது.
`அணு ஆயுத தாக்குதலின் மூலகாரணம், கொடிய அணு ஆயுதப் போரின் வெறியர்கள்` என அமெரிக்காவை அந்த அறிக்கை விமர்சித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஜூலை மாதம் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய இரண்டு பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மீது வட கொரியா சோதனை நடத்தியதிலிருந்து, பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம் வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
இதனைத் தொடர்ந்து 1,60,000 அமெரிக்க மக்கள் வாழக்கூடிய, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ள குவாம் பகுதியில், நடுத்தர மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திட்டத்தை ஒரு சில நாட்களில் இறுதி செய்ய உள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.
வட கொரியா குறித்து இதுவரை தான் வெளியிட்ட அறிக்கைகள் கடினமானவை அல்ல எனவும், வட கொரியா மிக, மிக பதட்டமான சூழலை விரைவில் சந்திக்கும் எனவும் டிரம்ப் கடந்த வியாழன்று தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்போதும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வட கொரியாவின் கூட்டாளியான சீனாவை கடிந்து கொண்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அந்த நாட்டினால் நிறைய செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தாக்குதல் நடத்தினால், சீனா நடுநிலை வகிக்கும் என அந்நாட்டின் அரச செய்தித்தாளான `குளோபல் டைம்ஸ்` தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வட கொரியாவின் மீது தாக்குதல் நடத்தி, அங்கு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முயற்சி செய்தால், சீனா தலையிட்டு, அதனை தடுக்கும் என அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வட கொரியாவுக்கு எதிரான போரில் இணையத் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
- ''கமல் முரசொலி மேடையேறியது தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்''
- `மெர்சல்` பாடல் வெளியீடு: 'தமிழர்களுக்கான பாடல்' என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் புகழாரம்
- ''சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்'': நடிகர் விஜய்
- கும்பகோணம் பள்ளி தீ விபத்து: குற்றவாளிகள் விடுவிப்புக்கு அதிர்ச்சி, கண்டனம்
- கட்சிக்கு அப்பாற்பட்டு முரசொலி நாளிதழின் சமூக பங்கு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












