பறவையால் தாக்கப்பட்டதா? திருப்பிவிடப்பட்ட ஏர்-ஏசியா விமானம்

பட மூலாதாரம், ABC
கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த ஏர்ஏசியா எக்ஸ் விமானத்தை பறவை தாக்கியதாக பயணிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து, மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே திருப்பி விடப்பட்டது.
359 பேர் பயணித்த அந்த ஜெட் விமானம் கோல்ட் கோஸ்ட்டில் இருந்து திங்கட்கிழமையன்று 22:20 (12:20 GMT) மணிக்கு புறப்பட்டது.
பிரிஸ்பேனில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகள், எஞ்சினில் இருந்து இரைச்சல் ஒலி கேட்டதாகவும், தீப்பொறிகள் பறந்ததை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
"விமான ஓடுபாதையில் இரண்டு பறவைகள் கிடந்தன" என்று விமான நிறுவனம் கூறுகிறது.
வெளியில் "ஆரஞ்சு நிற பொறிகள்" தோன்றுவதற்கு முன்னதாக "நான்கு அல்லது ஐந்து முறை மோதும் ஓசை" கேட்டதாக டிம் ஜோகா என்ற பயணி தெரிவித்தார்.
"அதன்பிறகு, விமானம் குலுங்கத் தொடங்கியது, இரைச்சல் ஒலிகளும் கேட்டன, பிறகு பெரிய அளவிலான ஓசைகள் எழுந்தன" என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்பட்ட உடனே இவை நிகழ்ந்ததாக மற்றொருபயணி எரிக் லிம் கூறுகிறார்.
"தொடர்ந்து தீப்பொறிகள் எழுந்தன, சிலர் அழத் தொடங்கிவிட்டார்கள், சிலரோ, கடவுளே, கடவுளே என்று அலறத் தொடங்கினார்கள்" என தனது பேஸ்புக் பதிவில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
விமான ஓட்டியும், பணியாளர்களும் "துரிதமாக செயல்பட்டார்கள்" என்று ஏர்ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் இஸ்மாயில் கூறுகிறார்.
"D7 207 விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய அனைவரையும் கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்வதற்கான சிறப்பு விமானத்தை ஏர்ஏசியா எக்ஸ் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக" அவர் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம், ஏர்ஏசியா எக்ஸ் விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட பிரச்சனையால் அது சலவை இயந்திரம் போல் குலுங்கியதால் மீண்டும் பெர்த்துக்கே திருப்பி விடப்பட்டது.
இந்த மாதத் தொடக்கத்தில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெரிய அளவிலான துளை ஒன்று தெரிந்ததால், விமானம் அவசரமாக சிட்னியில் தரையிறக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில், ஏர்ஏசியா விமானம் ஜாவா கடல்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் ரேடார் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால் நிகழ்ந்த இந்த விபத்தில் 162 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












