''போக்குவரத்து விதிமுறையில் தவறிழைத்ததே காரணம்''; வழக்கை சந்திக்கும் வீனஸ் வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் தவறுதலாக மரணத்தை ஏற்படுத்திய வழக்கை எதிர்கொள்கிறார். ஃப்ளோரிடாவில் வீனஸ் வில்லியம்ஸ் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி பாம் பீச் கார்டன்ஸ் நகரில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 78 வயதான முதியவர் பெருமளவிலான அபாயகரமான காயங்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையை பொறுத்தவரை, ஜெரோம் பார்சனின் மரணத்திற்கு வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிமுறையில் தவறிழைத்ததே காரணம் என்று கூறபடுகிறது.
37 வயதான வில்லியம்ஸ் வரும் திங்கள் கிழமை தொடங்கவுள்ள விம்பிள்டன் போட்டியில் 20-வது முறையாக அவர் கலந்து கொள்கிறார்.
விபத்து ஏற்பட்ட போது 2016 ஹுண்டாய் ஏக்செண்ட் மாடல் காரில் தனது கணவர் ஜெரோமுடன், முன்னிருக்கையில் தான் பயணித்ததாக லிண்டா பார்சன் தெரிவித்திருப்பதாக காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.
பச்சை விளக்கு எரிந்த போது தாங்கள் சாலையின் சந்திப்பில் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது வீனஸ் வில்லியம்சின் 2010 டொயோட்டா மாடல் கார் நேர் எதிராக எங்களின் காரின் முன்பகுதியில் மோதியது என்றும் காவல்துறையிடம் பார்சன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், FAMILY HANDOUT
சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலின் காரணமாக சாலையில் மையப்பகுதியில் தாங்கள் சிக்கிக் கொண்டதாக காவல்துறை அறிக்கையில் பார்சன் தெரிவித்துள்ளார்.
''ஆழ்ந்த துயரத்தால் பாதிக்கப்படிருக்கும் பார்சன் இதில் இருந்து எப்படி மீளப்போகிறார் என்பது குறித்து தெரியவில்லை'' என்று பார்சனின் வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டெய்ங்கெர் ஏபிசி தொலைக்காட்சியின் குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இதனால் 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நடைபெற்ற பல்வேறு அறுவை சிகிச்சைகளும் அவரது மரணத்திற்கு காரணமாகிவிட்டது. மேலும் அவரது கணவருடனான 35 ஆண்டு கால வாழ்க்கை வீனஸ் வில்லியம்ஸ் தவறாக ஏற்படுத்திய கார் விபத்தினால் தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்டத்தில் வழக்கின் ஆதாரங்களை பாதுகாக்கவும், ஆதரங்களுக்கான சான்றுகளை அணுகவும் தாங்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரோம் பார்சன் ஜூன் 22-ம் தேதி தனது மனைவி லிண்டா பார்சனின் 68-வது பிறந்தநாளன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விபத்திற்கு பிறகு ஜெரோம் பார்சனின் மனைவி லிண்டா பார்சனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் வீனஸ் வில்லியம்ஸ் பாதிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சரியான பாதையில் பார்சனின் கார் சென்று கொண்டிருந்த போது, வீனஸ் வில்லியம்ஸ் விதிமுறைகளை மீறி தவறிழைத்ததாக காவல்துறையின் அறிக்கையை பெற்றுள்ள அமெரிக்க ஊடகம் கூறுகிறது.
போக்குவரத்து நெரிசலின் காரணமாக சாலையின் சந்திப்பில் பார்சன் கார் வந்த பாதையில் திடீரென வில்லியம்சின் கார் சென்று மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட போது வில்லியம்சின் கார் மணிக்கு 5 மைல் வேகத்தில்தான் சென்றதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.
வில்லியம்ஸின் வழக்கறிஞர் மால்கம் கன்னிங்ஹாம் அமெரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பச்சை விளக்கு எரிந்த பின்னர் தான் வில்லியம்ஸ் சாலையில் குறுக்கிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
''இந்த சம்பவத்தில் வில்லியம்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான குறிப்புகள் அல்லது போக்குவரத்து விதிமீறல் குற்றம் என எதையும் காவல்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.''
மேலும், இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும் வீனஸ் தனது ஆழ்ந்த இரங்கலை அந்த குடும்பத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து வெளியேற்றபட்ட சில நாட்களுக்கு பின் இந்த விபத்து நடைபெற்றது.
அவர் மீது குற்றவியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் எதுவும் பதியப்படவில்லை.
விம்பிள்டன் போட்டிகளுக்காக தற்போது லண்டனில் வீனஸ் வில்லியம்ஸ் பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் 2008-ம் ஆண்டில் விம்பிள்டன் பட்டம் வென்ற இவர் இதற்கு முன்னர் 5 முறை இந்த பட்டத்தை வென்றுள்ளார்.
இங்கிலாந்து கிளப் போட்டிகள் அனைத்தும் வருகிற திங்கள் கிழமை முதல் தொடங்குகிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












