இரான் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படாது - டிரம்ப்
தற்போது இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம், ஒருபோதும் இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
2015 ல் உலக நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதிலிருந்து, இரானியர்கள் ''அவர்கள் நினைத்ததை செய்யலாம்'' என்று எண்ணியுள்ளனர் என்று டிரம்ப் கூறினார்
இரான் பற்றி டிரம்ப் சொன்னது என்ன?
ஜெருசலேமில் பேசிய டிரம்ப், இரான் அவருக்கு முன்பு அதிபராக இருந்த பாரக் ஒபாமாவுடன் ஒரு "அற்புதமான ஒப்பந்தம்" ஒன்றை போட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் இரானுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கும் ஒரு வாய்ப்பாகவும் சுபிட்சத்தை வழங்குவதாகவும் இருந்தது என்றார்.
ஆனால் அதற்கு ''நன்றியுடன் இருப்பதற்கு பதிலாக'' இரானியர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்தனர் என்றார் டிரம்ப்.
திங்களன்று பேசிய உரையில் அவர், இரான் ''பெரிய அளவில் நிதி அளித்து, பயங்கரவாதிகள் மற்றும் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் ஆயுதம் வழங்குவது'' போன்றவற்றை செய்வதாக குற்றம்சாட்டினார்.
''ஒருபோதும் இரானுக்கு அணுஆயுதங்கள் வழங்கப்படமாட்டாது,'' என்று டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் தெரிவித்தார்.
உலகநாடுகளுடன் 2015ல் செய்த ஒப்பந்தத்தின்படி, இரான் அதன் உறுதியான பொருளாதார நலன்களுக்கு பதிலாக தன்னுடைய அணுசக்தி திட்டத்தில் தடைகளை ஒப்புக் கொண்டது. மேலும் அந்த ஒப்பந்தம் தற்போதும் நீடிக்கின்றது என்று வெள்ளை மாளிகை கடந்த மாதம்கூட தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், EPA
''இரானின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது''
``பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு`` இரான் அளித்துவருவதாக தான் கூறும் ஆதரவை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று, இஸ்ரேலுக்கான தனது பயணத்தின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
இஸ்ரேலின் அண்டை நாடுகளான அரபு நாடுகளுக்கு இரானின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக டிரம்ப் கூறினார்.
சவூதி அரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை சந்தித்த டிரம்ப், இஸ்ரேல் வந்தடைந்தார்.
ஆனால், இரானும், அதன் கூட்டாளிகளான லெபனானிய போராளி குழு ஹெஸ்பெல்லா போன்றவையுமே, மத்திய கிழக்கில் இருக்கும் பயங்கரவாதிகள் எதிர்த்து நிற்பதாக இரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹஸன் ருஹானி கூறுகிறார்.
இரானின் உதவியில்லாமல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படாது என்றும் ருஹானி கூறுகிறார்.
இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நீடித்த நட்பு நிலவுவதாக கூறினார்.
இஸ்ரேலிய-பாலஸ்தீனிய சமாதான வழிமுறைகளுக்கான சாத்தியங்களைப் பற்றி நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், தற்போது அதற்கான ஒரு அரிய வாய்ப்பு அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரை வரவேற்ற இஸ்ரேலிய தலைவர் பெஞ்சமின் நெதன்யாஹூ, சாமாதானத்திற்கான டிரம்பின் அர்ப்பணிப்பை குறிப்பிட்டு பேசினார்.
பிறகு ஜெருசலேமின் பழைய நகரத்திற்கு சென்ற டிரம்ப், அங்கு யூத மதத்தின் மேற்கு சுவரில் பிரார்த்தனை செய்தார்.
தொடர்புடைய கட்டுரைகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












