ஊர் மட்டுமா, நாடே மாறிப் போச்சு இந்த மாணவருக்கு!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்வதற்கு பதிலாக கனடாவின் சிட்னி என்ற இடத்திற்கு தவறுதலாக விமானம் மூலம் சென்றடைந்த நெதர்லாந்து மாணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மிகவும் மலிவாக கிடைத்த விமானப் பயணச்சீட்டின் மூலம் அதிக செலவில் அவர் பாடம் கற்றுக்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பிற பயணச்சீட்டுகள் எல்லாவற்றையும் விட மிகவும் மலிவாக இந்த பயணச்சீட்டு இருந்ததால், அதனை பதிவு செய்து பயணித்து தவறுதலான இடத்திற்கு வந்துவிட்டதாக மிலன் ஸ்கிப்பர் கனடா ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
அவர் திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர கடற்கரையோரத்திற்கு நேராக செல்வதற்கு பதிலாக, ஒரு லேசான மேலாடையை தவிர எதுவுமில்லாதவராக ஒருவித பனிப்புயல் அடிக்கும் காலநிலை நிலவும் பகுதியை சென்றடைந்திருந்தார்.
அவரது இல்லம் அமைந்துள்ள ஆம்ஸ்டர்டாம் நகர் திரும்புவதற்கான பயணச்சீட்டை பதிவு செய்ய அந்த விமான நிறுவன பணியாளர்கள் அவருக்கு உதவியுள்ளனர்.
கனடாவில் சிறிய பயண நிறுத்தத்திற்கு பிறகு அவருக்கான பயண இணைப்பு விமானம் சிறியதொரு கனடா விமானமாக இருப்பதை அறிய வந்தவுடன் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளதாக 18 வயதான மிலன் ஸ்கிப்பர் உணர்ந்து கொண்டார்.
"இந்த விமானம் மிகவும் சிறியதாக இருந்தது. எனவே, இதுவா என்னை ஆஸ்திரேலியா கொண்டு செல்ல உள்ளது என்று ஐயமுற்றேன்" என்று அவர் கனடா ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
இது முதல் முறையல்ல
சுற்றுலா பயணியர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திற்கு பதிலாக கனடாவின் சிட்னி நகரத்திற்கு வருகின்ற இத்தகைய தவறுகளை செய்வது இது முதல் முறையல்ல.
2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலுள்ள ஓப்ரா இல்லத்தை பார்ப்பதற்கு பதிலாக கடல் நண்டு படகுகளுக்கு மிகவும் பிரபலமான கனடாவின் சிட்னியில் பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம் காதல் ஜோடி வந்திறங்கியது.

பட மூலாதாரம், Roberto Machado Noa/LightRocket via Getty Images
2009 ஆம் ஆண்டு, தன்னுடைய மகனுடன் பயணம் செய்த நெதர்லாந்து தாத்தா ஒருவரும் இதே இடத்திற்கு தவறுதலாக வந்தடைந்ததாக டெய்லி மெயில் தகவல் தெரிவித்தது.
2010 ஆம் ஆண்டு இத்தாலிய சுற்றுலா பயணியரும் இதே தவறை இழைத்தனர்.
இந்த இடத்தில் ஸ்கிப்பர் சென்று இறங்கியவுடன், அவர் நெதர்லாந்து செல்வதற்கு வசதியாக டொரென்டோவுக்கு செல்வதற்கான பயணச்சீட்டை பதிவு செய்ய விமான நிறுவன பணியாளர்கள் உதவியுள்ளனர்.
ஆம்ஸ்டர்டாமிலுள்ள விமான நிலையத்தில் தன்னுடைய மகனை வரவேற்ற அவனுடைய தந்தை இந்த சம்வத்தை அறிந்தவுடன் மிகவும் விழுந்து விழுந்து சிரித்ததாக கனடா ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
காணொளி: நெதர்லாந்து: அகதிகளை உள்ளூர்வாசிகளுடன் இணைக்க முயற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













