ரிலையன்ஸ் குழுமம்: நிகர லாபத்தில் வெறும் 3.1% மட்டும் வரி செலுத்தியது எப்படி?

ரிலையன்ஸ் குழுமம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானாலும், ரிலையன்ஸ் குழுமம் தன் மொத்த லாபத்தில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே வரி செலுத்தியது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

2020 - 21 நிதி ஆண்டில் (மார்ச் 2021) ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த லாபம் 55,461 கோடி ரூபாய். அதில் 5,642 கோடி ரூபாய்க்கு வரி செலுத்தத் தேவை இல்லை. மீதமுள்ள 49,819 கோடி ரூபாய்க்கு வரி செலுத்தினால் போதும்.

ரிலையன்ஸ் குழுமத்துக்கு இது எப்படி சாத்தியமனது?

ர்லையன்ஸ் குழும வரி விவரம்

49,819 கோடி ரூபாயில் 34.944 சதவீதம் கணக்கிட்டால் 17,409 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும்.

1. ரிலையன்ஸ் குழுமம் செலுத்த வேண்டிய இந்த 17,409 கோடி ரூபாயில், 14,882 கோடி ரூபாயை மேட் (Minimum Alternative tax) என்கிற வரி வரவாக காட்டி இருக்கிறார்கள். சுருக்கமாக மேட் வரியை முன் கூட்டி செலுத்தும் வரி என வைத்துக் கொள்ளலாம். முன் கூட்டி செலுத்திய வரியை, இந்த ஆண்டில் செலுத்த வேண்டிய வரியில் கழித்துக் கொள்கிறார்கள்.

2. அதே போல முன்பு ஏற்பட்ட நஷ்டமான 4,261 கோடி ரூபாயை, இந்த ஆண்டு செலுத்த வேண்டிய வரியில் கழித்திருக்கிறார்கள்.

3. அதனைத் தொடர்ந்து, வரி செலுத்த தேவையற்ற ரிலையன்ஸின் துணை நிறுவனங்கள், பல்வேறு வரி விகிதங்களில் செலுத்தி இருக்கும் தொகையில் ஏற்படும் மாறுபாடுகள் என 2,184 கோடி ரூபாயை கழித்திருக்கிறார்கள்.

4. இது போக முன் கூட்டி செலுத்திய சில வரிகள், வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட வருமானங்கள் போன்ற தலைப்புகளின் கீழும் வரிச் சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள். 6,417 கோடி ரூபாய்க்கு செய்த செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.

5. இப்படி ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் 55,461 கோடி ரூபாயில் 1,722 கோடி ரூபாய் மட்டும் வரியாகச் செலுத்தி இருக்கிறது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதை விகிதாச்சாரத்தில் கணக்கிட்டால் ஒட்டுமொத்த லாபத்தில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தி இருக்கிறது.

ஆதாரம் மற்றும் தரவுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 2020 - 21 ஆண்டறிக்கையில் இருந்து பெறப்பட்டன.

நிபுணர்கள் சொல்வதென்ன?

ரிலையன்ஸ் குழுமம்

பட மூலாதாரம், Getty Images

ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, ஜியோ டெலிகாம் சேவை, ரிலையன்ஸ் ரீடெயில் என பல வியாபாரங்களை ஒரே நிறுவனமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே அதன் கணக்கு வழக்குகளும் ஒன்றாக இணைத்து கொடுக்கப்படுகின்றன. எனவே இன்னும் தெளிவாக நிதி நிலை அறிக்கைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் அதைத் தான் முதலீட்டாளர்களும் எதிர்பார்ப்பார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :