பிக் பாஸ் சீஸன் 4 தமிழ்: பங்கேற்பவர்கள் யார், யார்? பின்னணி என்ன?

bigg boss season 4 tamil contestants

பட மூலாதாரம், vijay television

படக்குறிப்பு, சனம் ஷெட்டி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீஸன் நேற்று (அக்டோபர் 4) துவங்கியிருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் யார், யார்? அவர்களது பின்னணி என்ன?

தமிழில் ஏற்கனவே மூன்று சீஸன்கள் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸன் மீண்டும் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் மாத இறுதியில் இந்நிகழ்ச்சி துவங்க வேண்டிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போடப்பட்டது.

இதற்குப் பிறகு, அக்டோபர் 4ஆம் தேதியன்று நிகழ்ச்சி துவங்கியது. முந்தைய மூன்று சீஸன்களைப் போலவே இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரியோ ராஜ் அறிமுகப்படுத்தப்பட்டார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, அதன் பிறகு விஜய் டிவியில் சரவணன் - மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார் ரியோ ராஜ்.

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எடுக்கப்பட்ட'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் நடித்திருக்கிறார்.

இரண்டாவது நபராக வீட்டினுள் சென்ற சனம் ஷெட்டி 2016ஆம் ஆண்டில் 'மிஸ் சவுத் இந்தியா' பட்டத்தை வென்றவர். 'அம்புலி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கடந்த முறை பிக்பாஸில் பங்கேற்ற தர்ஷனுக்கு ஆதரவாக இணையதள ஊடகங்களில் பேட்டியளித்து வந்தார். அதேபோல் தர்ஷன் - சனம் ஷெட்டியின் நிச்சயதார்த்த விவகாரமும் சர்ச்சையானது.

'பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'கடலோர கவிதைகள்' உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரேகா நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சீஸனில் பாத்திமா பாபு போட்டியாளராக கலந்து கொண்டதைப் போல் இம்முறை ரேகா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

மாடலிங் துறையைச் சேர்ந்தவர் பாலாஜி முருகதாஸ். 2017ஆம் ஆண்டு மிஸ்டர் பெர்ஃபெக்ட் பட்டம் பெற்ற இவர் 'டைசன்' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இத்திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக வீட்டினுள் நுழைந்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்துக்கு சமூகவலைதளங்களில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கடந்த முறை லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக உள்ளே சென்ற நிலையில், இம்முறை அனிதா சம்பத்தை களமிறக்கியுள்ளது நிகழ்ச்சிக் குழு.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

bigg boss season 4 tamil contestants

பட மூலாதாரம், Shivani facebook

படக்குறிப்பு, ஷிவானி நாராயணன்

இன்ஸ்டாக்ராமில் ஷிவானி நாராயணனை ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். தனது நடனங்கள் மற்றும் போட்டோ ஷூட்களால் ரசிகர்களை கவர்ந்து வந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது போட்டியாளராக வீட்டினுள் சென்றிருக்கிறார்.

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், ஏழாவது போட்டியாளராக வீட்டினுள் நுழைந்திருக்கிறார். தமிழ், மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது போட்டியாளராக பின்னணி பாடகர் வேல்முருகன் களமிறங்கியுள்ளார்.

ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கும் வேல்முருகன் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார்.

நடிகரான ஆரி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டது, சென்னை பெருவெள்ளத்தின் போது உதவி செய்தது ஆகியவற்றின் மூலம் செய்திகளில் அடிபட்டவர். தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது போட்டியாளராக சோம் சேகர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சீஸனில் கலந்து கொண்ட முகேனைப் போலவே இவரும் மாடலிங், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். இவர் ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'3' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தவர் கேப்ரில்லா. 'ஜோடி நம்பர் 1' நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவி மூலம் கவனம் பெற்ற இவரும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார்.

விஜய் டிவியின் முன்னணி நகைச்சுவை பிரபலங்களுள் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவரது காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது பன்னிரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், தன் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

'கலக்கப்போவது யாரு சீசன் 9', 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது பதிமூன்றாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

bigg boss season 4 tamil contestants

பட மூலாதாரம், vijay television

படக்குறிப்பு, ரம்யா பாண்டியன்

மாடல், டிவி நடிகை, சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முக திறமையாளர் சம்யுக்தா கார்த்திக். இவர் பதினான்காவது போட்டியாளராக பிக்பாஸ் 4 சீசனில் களமிறங்கியுள்ளார்.

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் பதினைந்தாவது போட்டியாளராக சென்றிருக்கிறார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார். பாட்டிகள் ஜாக்கிரதை என்ற தொடரில் பாட்டியாக நடித்துள்ள சுரேஷ், சக்கரவர்த்தி அழகன் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டில் பெரும் ரசிகர் வாக்குகளுடன் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்ற ஆஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார் அவர்.

தற்போது மொத்தமாக 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில், முதல் வாரத்தில் போட்டியாளர்கள் யாரும் வெளியேற்ற படமாட்டார்கள்.

2017ஆம் ஆண்டு தமிழில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் ஆரவ்வும் இரண்டாவது சீஸனில் நடிகை ரித்விகாவும் மூன்றாவது சீஸனில் முகேனும் வெற்றிபெற்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: