மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பெண் மாற்றுத் திறனாளியின் செயற்கை கால் கழற்றச் சொல்லப்பட்டதா?

மாற்றுத்திறனாளி போராட்டம்
படக்குறிப்பு, மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையும்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் செயற்கை காலை கழற்றிவிட்டு வரும்படி கூறியதாகவும் கோவிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல 500 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ஊழியர் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் ஒருவர் காணொளியை பகிருந்திருந்தார்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் லஞ்சம் கேட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் சார்பாக இணை ஆணையர் விளக்க அளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு என்ன நடந்தது? அவர் வெளியிட்ட காணொளியில் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன?

என்ன நடந்தது?

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் இடது கால் முழுமையாக செயல்படாததால் செயற்கை கால் உதவியுடன் நடக்கக்கூடிய மாற்றுத்திறனாளி அவார். இவர் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்று இருக்கிறார்.

செயற்கைகாலுடன் கோவிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தன்னை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச் செல்ல கோவில் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகவும், பணியிலிருந்த அர்ச்சகர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறி இவர் ஒரு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார்.

மாற்றுத்திறனாளியான தன்னை கோவில் நிர்வாகம் மோசமாக நடத்தியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்செல்வி வெளியிட்ட காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி என்ன நடந்தது என்று அவர் வெளியிட்ட வீடியோவில் விளக்கமாகக் கூறியிருந்தார்.

கோவிலுக்குள் சென்ற பொழுது நுழைவு வாயிலி பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த மூன்று காவலர்கள் செயற்கை கால் உபகரணத்தை கழற்றி விட்டு தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக தமிழ்செல்வி அந்த வீடியோவில் கூறினார்.

செயற்கை கால் உதவி இல்லாமல் கோவிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று வர அங்கிருந்த கோவில் ஊழியர்கள் 500 ரூபாய் பணம் கேட்டதாகவும், இதை எதிர்த்த போது அர்ச்சகர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காவல்துறை விளக்கம்

மாற்றுத்திறனாளி போராட்டம்
படக்குறிப்பு, சக்கர நாற்காலியை தள்ளிச்செல்ல 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தி தமிழ்செல்வி(படத்தில் இருப்பவர்) வீடியோ ஒன்றை வெளியிட்டார்

இந்தக் காணொளி தொடர்பாக மதுரை மாநகரக் காவல் துறையிடமிருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி 'உண்மை விளக்கம்' என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிட்டது.

அதில், "தருமபுரியைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற மாற்றுத்திறனாளி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காலை 9:30 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரது கைப்பையை சோதனையிட்ட போது அதில் சிறிய அளவிலான கத்தி ஒன்று இருந்தது. அதை வெளியில் வைத்து விட்டு கோவிலுக்குள் செல்ல அவரிடம் கூறப்பட்டது," என்று காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயற்கைக்காலைக் கழற்றச் சொன்னது தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறை, “தமிழ்செல்வி அணிந்திருந்த செயற்கைகாலுடன் காலணியும் இருந்தது. அதனால் அதைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குச் சக்கர நாற்காலியில் செல்லவே காவலர்கள் கூறினர். அவரும் கோவிலுக்குச் சக்கர நாற்காலி பயன்படுத்தி சென்று வந்தார். ஆனால், காவல்துறையினரும், கோவில் பணியாளர்களும் சுவாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாக காணொளியில் உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்து பதிவிட்டு உள்ளார்,” என்று தெரிவித்துள்ளது.

காவல்துறை அளித்த விளக்கம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்செல்வி, காலணியுடன் சேர்த்து செயற்கைக்காலை முழுமையாகக் கழற்றச் சொல்லிக் காவலர்கள் தன்னிடம் வற்புறுத்தியதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “செயற்கைக்கால் உபகரணத்தைக் கழற்றினால் என்னால் நடக்க முடியாது என்று கூறியபோது காவலர்கள் வற்புறுத்திக் கழற்றினர். அதைத் தொடர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து கோவிலுக்குள் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அழைத்து செல்ல அங்கிருந்த ஊழியர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை தரமறுத்த போது பாதியிலேயே என்னை விட்டுச் சென்றார்,” என்கிறார் தமிழ்செல்வி.

மேலும் கத்தி வைத்திருந்தது தொடர்பாக, “எனக்கு நீரிழிவு பிரச்சனை இருப்பதால் கைப்பையில் இரண்டு பழங்களும் ஒரு பழம் வெட்டும் கத்தியும் வைத்திருந்தேன். அதனை வைக்க வேண்டும் என கூறியவுடன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு உள்ளே சென்றேன்,” என்றார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
படக்குறிப்பு, செயற்கைக்காலை கழற்றி விட்டு மாற்றுத்திறனாளியை கோவிலுக்குள் வரச்சொன்னத்தால் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு போராட்டம் நடத்தினர்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கை தவறானது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிலுக்குள் எளிதாக சென்று வர உரிய ஏற்பாடு வழங்கப்பட வேண்டும் என கூறி கோவிலில் நுழையும் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்புப்போர் உரிமைகள் சங்கம் அறிவித்தது.

மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி முன்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி 30-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த முயன்றனர்.

அவர்களுடன் காவல்துறையினர் மற்றும் கோவில் இணை ஆணையர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் செயற்கைக் கால் உபகரணத்துடன் கோவிலுக்குள் சென்று அந்த மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் செல்லும் பொழுது இது போன்ற சில நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே சென்று வர உரிய வசதிகள் செய்து தரவேண்டும் என்றார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
படக்குறிப்பு, ”தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் அனைத்து வசதியும் செய்துதர வேண்டும்” - மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் பாலமுருகன்

3 காவலர்கள் பணியிட மாற்றம்

மாற்றுத்திறனாளிகள் விவகாரம் என்ன நடந்தது என்று பிபிசி தமிழிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாற்றுத்திறனாளியின் செயற்கைக்கால் நீக்க வலியுறுத்திய சம்பவத்தில் சார்பு ஆய்வாளர் ஒருவர் உள்பட மூன்று காவலர்கள் வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இது போல நடக்காமல் இருக்க பணியிலிருக்கும் காவலர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையர் கிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் வசதியாக சென்று வர அனைத்து ஏற்பாடுகளும் கோவிலில் உள்ளதாகவும், இது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டும் என்று தெரிவித்தார்.

"மீனாட்சியம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களைக் கழற்றி விட்டு வரச் சொல்வது இல்லை. மாற்றுத்திறனாளி உபகரணத்துடன் காலணிகள் இருந்தால் மட்டும் அவற்றை கழற்றிவிட்டு வரும்படி கூறுகின்றனர்,” என்கிறார்.

சக்கர நாற்காலியை தள்ள ஊழியர் லஞ்சம் கேட்டது தொடர்பாகவும், அர்ச்சகர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)