தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்களுக்கு நோய் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னர் தெரிவித்திருந்தார். அதனால் சுகாதாரத்துறை வெளியிடும் செய்திக்குறிப்பில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக, அதிகரித்துள்ள தொற்று எண்ணிக்கை என தனியாக ஒரு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக தொற்று ஏற்பட்ட 639 நபர்களில், 81 நபர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் நான்கு நபர்கள் இறந்துள்ளதால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

இன்று இறந்தவர்கள் அனைவருமே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் அவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 634 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4172ஆக உயர்ந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

மாவட்ட வாரியான பட்டியலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக தொடர்ந்து சென்னை இடம்பெற்று வருகிறது. இன்று பாதிக்கப்பட்டதாக அறியப்பட்ட 639 நபர்களில் சென்னை நகரத்தில் 480 நபர்கள் உள்ளனர்.

அதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,750ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் மற்றும் புதிதாக நோய் தொற்று பதிவாகாத மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், 25 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி அத்தியாவசிய தேவைக்களுக்காக தமிழக அரசு பொது போக்குவரத்தை தொடங்கவுள்ளது.

முன்னதாக அறிவுப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக நோய் தொற்று ஏற்படாத மாவட்டங்களாக, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்கள் இருப்பதால், தளர்வுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

அதேபோல, தொற்று அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: